×

தமிழகத்தில் கடந்த ஆண்டில் 108 ஆம்புலன்ஸ் சேவையால் 19,19,504 பேர் பயன்

சென்னை: தமிழகத்தில் கடந்த 2023ல் 108 ஆம்புலன்ஸ் சேவையால் 19,19,504 பேர் பயனடைந்துள்ளனர். முன்னாள் முதல்வர் கலைஞர் 2008ம் ஆண்டு தமிழக மக்களின் அவசர மருத்துவ பயன்பாட்டிற்காக இலவச 108 ஆம்புலன்ஸ் சேவையை தொடங்கி வைத்தார். இது மக்கள் இடையே நல்ல வரவேற்பு பெற்றது. விபத்துகளில் சிக்கிய ஏராளமானோர் உயிர்கள் இதன் மூலம் காப்பாற்றப்பட்டது. ஆண்டுக்கு ஆண்டு இதனுடைய சேவை அதிகரித்து வருகிறது. தீவிர சிகிச்சை ஆம்புலன்ஸ், மகப்பேறு ஆம்புலன்ஸ் மற்றும் முதலுதவி பைக் ஆம்புலன்ஸ்கள் என மொத்தம் 1,353 ஆம்புலன்ஸ்கள் தமிழ்நாட்டில் இயக்கப்படுகின்றன. இதில் சுமார் 6 ஆயிரம் ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர்.

குறிப்பாக 108 ஆம்புலன்ஸில் உயிர் காக்கும் உபகரணங்கள், அவசர சிகிச்சைக்கு தேவையான உபகரணங்கள் என அனைத்து வசதிகளும் இருக்கும். தமிழகத்தில் இந்த ஆம்புலன்ஸ் சேவைகள் மூலம் தினமும் சராசரியாக 5,000க்கு மேற்பட்டோர் பயனடைந்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த ஆண்டு மட்டும் தமிழ்நாடு முழுவதும் 19,19,504 பேர் 108 ஆம்புலன்ஸ் சேவையால் பயனடைந்துள்ளனர். 2022ல் 17,74,832 பேர் பயனடைந்த நிலையில் கிட்டத்தட்ட 1.44 லட்சம் பேர் அதிகமாக கடந்த ஆண்டு பயனடைந்து உள்ளனர். இந்த 19 லட்சம் பேரில் பிரசவத்துக்காக மட்டும் 5,07,071 சேவைகள் வழங்கப்பட்டுள்ளன. மேலும் சாலை விபத்துகளில் சிக்கியவர்கள் 3,34,527 பேரையும், 1.19 லட்சம் இதயநோயாளிகளையும் மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். மேலும் 33 ஆயிரம் குழந்தைகளும் இதன் மூலம் பயனடைந்துள்ளனர்.

இதுதொடர்பாக சுகாதாரத்துறை அதிகாரி கூறுகையில், ‘‘மாவட்ட மேலாளர்கள் மற்றும் ஒருங்கிணைப்பாளர்களால் ஆம்புலன்ஸ் தேவையான இடத்திற்கு சரியான நேரத்தில் அனுப்பப்படுவதை தொடர்ந்து கண்கணித்து வருகிறோம். இது ஆம்புலன்ஸ் சேவையை மேம்படுத்த உதவியாக உள்ளது. சாலை விபத்துகள் அதிகம் ஏற்படும் இடங்களின் அருகே வாகனங்களை நிறுத்தியுள்ளோம். இதனால் ஏதாவது விபத்து ஏற்பட்டால் உடனடியாக சேவை வழங்கப்படுகிறது. விபத்து ஏற்பட்டு அழைப்பு வந்த உடன் ஆம்புலன்ஸ் ஒரு நிமிடத்திற்குள் நகர வேண்டும் என்ற இலக்கு நிர்ணயித்து பணியாற்றி வருகிறோம்’’ என்றார்.

* சென்னையில் 2023ல்…
கடந்த ஆண்டு சென்னையில் மட்டும் 1.05 லட்சம் பேர் 108 ஆம்புலன்ஸ் மூலம் பயன் பெற்றுள்ளனர். அதில் பிரசவ சிகிச்சைகளுக்காக 6,044 கர்ப்பிணிகள் பயனடைந்துள்ளனர். சாலை விபத்துகளில் சிக்கிய 10,659 பேரை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர்.

The post தமிழகத்தில் கடந்த ஆண்டில் 108 ஆம்புலன்ஸ் சேவையால் 19,19,504 பேர் பயன் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Chennai ,Former ,Chief Minister ,Kalainar ,service ,
× RELATED தமிழ்நாடு அரசு அறிவிப்பு: அனைத்து அரசு பள்ளிகளிலும் இணையதள வசதி அறிமுகம்